ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன? - தேர்தல் ஆணையம் விளக்கம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Update: 2021-10-03 00:55 GMT
சென்னை,

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தலும், 28 மாவட்டங்களுக்கு தற்செயல் தேர்தலும் வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள வாக்காளர்களில் தங்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு உள்ளவர்களும், வாக்குச்சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

அதன்படி ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, தபால் கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான்கார்டு, தேசிய மக்கள் பதிவேட்டின்கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய-மாநில அரசு, மத்திய-மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை வாக்களிக்க வாக்காளர்கள் பயன்படுத்தலாம்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்