நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை பாயுமா? போலீஸ் கமிஷனர் பேட்டி

நடிகர் சித்தார்த் மீதான புகார் மீது விசாரணை தொடங்கிவிட்டதாகவும், வழக்குப்பதிவு செய்யப்படும் பட்சத்தில் சம்மன் அனுப்பி அவரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தப்படும் என்றும், போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.

Update: 2022-01-12 23:02 GMT
சென்னை,

சென்னை போலீஸ் குடும்பத்தை சேர்ந்த 115 பேருக்கு பல்வேறு நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலைக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 25 பேர் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை பெற்றனர்.இந்த நிகழ்ச்சி முடிவில் கமிஷனர் சங்கர்ஜிவால், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போது வேலைவாய்ப்பு பெற்றவர்கள் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அந்த வேலையை செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு அனுபவம் கிடைக்கும். பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் திரும்பி வரும் போதும் பாதுகாப்பு போடப்படும். வைகுண்ட ஏகாதசியையொட்டியும் 1,200 போலீசார் ஷிப்டு முறையில் பணியாற்றுவார்கள்.

நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கையா?

நடிகர் சித்தார்த் மீது இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் ஒரு பெண் செய்தி வாசிப்பாளர் ஆகிய 2 பேரின் புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய மகளிர் ஆணையம் அனுப்பிய கடிதம், டி.ஜி.பி. மூலமாக சென்னை போலீசுக்கு வந்துள்ளது. அதுபற்றி சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கி விட்டனர். அது தொடர்பான நடவடிக்கை பற்றி சட்ட ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

சி.எஸ்.ஆர். போடப்பட்டால் சில நேரங்களில் அவர்களாகவே முன்வந்து விசாரணைக்கு ஆஜராகி விடுகிறார்கள். சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் பட்சத்தில், அவருக்கு சம்மன் அனுப்பி நேரில் அவரை வரவழைத்து விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்