புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பலத்த மழை
புதுச்சேரியில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்தமழை பெய்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.;

புதுச்சேரியில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்தமழை பெய்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகம், புதுவையில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் புதுச்சேரியில் நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது. 100.4 டிகிரி வாட்டி வதைத்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
பின்னர் மாலை வேளையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் பலத்தமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இந்த மழை காரணமாக சண்டே மார்க்கெட் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் அவதி
நகரப்பகுதியில் புஸ்சி வீதி, சின்னசுப்புராயப்பிள்ளை வீதி, இந்திராகாந்தி சிலை சதுக்கம், பூமியான்பேட்டை, கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர், உழவர்கரை, ரெட்டியார்பாளையம், மூலக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
மழையால் நகரில் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் அங்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதே போல் திருக்கனூர், திருபுவனை, வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இந்த மழை காரணமாக புதுவையில் நேற்று வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. வெயில் வாட்டி வந்த நிலையில் மழை கொட்டி தீர்த்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.