மாணவி ஸ்ரீமதி மரணம்: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு உறுதி

மாணவி ஸ்ரீமதி மரணத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதி தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-18 01:05 GMT

சென்னை,

சென்னை, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டு 3 நாட்களாக போராடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒரு மாணவியின் மரணத்தை கூட அரசியலாக்கி, தன் உள்கட்சி மோதலை திசைதிருப்ப அவர் இப்படி கூறியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்ரீமதி மரணத்தை பொறுத்தவரை, அந்த சம்பவம் வெளிவந்தவுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டிருந்தது. மாணவி மரணம் குறித்த விசாரணை தீவிரமாக நடந்து வந்த வேளையில், பெற்றோர் தரப்பில் சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு விசாரணை நாளை (இன்று) நடைபெற இருக்கிறது.

இதற்கிடையில் பிள்ளையை இழந்த பெற்றோரின் குடும்பத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி, மாணவியின் மரணம் குறித்த விசாரணை பாரபட்சமின்றி நடக்கும் என்று உறுதியும் அளித்துள்ளதை ஏனோ தன் கட்சியில் இருக்கும் குழப்பத்தில் மறந்து விட்டு, எந்த பதவியில் நாம் இருக்கிறோம்? என்பது தெரியாத குழப்பத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசின் மீது வசைபாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முடிவில் தவறு யார் மீது இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம், யாருக்கும் வேண்டாம். குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் விஷமிகளை அனுப்பி இந்த வன்முறையை தூண்டிவிட்டவர்கள் யார்? என்பதையும் சேர்த்தே போலீஸ் விசாரித்து வருகிறது.

ஆகவே கலவரத்தில் ஈடுபட்டவர்கள், தூண்டி விட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தக்க தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்பதோடு, மாணவி ஸ்ரீமதி மரணத்தில் நடைபெறும் சி.பி.சி.ஐ.டி விசாரணையின் அடிப்படையில் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்