'தினத்தந்தி' செய்தி எதிரொலி:கண்மாய்களில் விவசாய பயன்பாட்டுக்குஇலவசமாக வண்டல் மண் எடுக்க சிறப்பு முகாம்கள்

‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக, கண்மாய்களில் விவசாய பயன்பாட்டுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.;

Update:2023-03-19 00:15 IST

'தினத்தந்தி' செய்தி

கண்மாய்களில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேனி மாவட்டத்தில் இதற்காக அனுமதி பெற விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வந்தனர். கனிமவளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க சென்றால் கூட அலைக்கழிக்கப்படும் சம்பவம் அதிகரித்தது. இடைத்தரகர்கள் தொல்லையும் இருந்தது. இதுகுறித்து விவசாயிகளின் கருத்துகளுடன், சிறப்பு முகாம் நடத்தி மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று 'தினத்தந்தி'யில் விரிவான தகவல்களுடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக மாவட்டத்தில் கண்மாய்களில் இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ளும் வகையில் அனுமதி வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விவசாயிகள் தங்களின் விவசாய நிலத்தினை மேம்படுத்துவதற்கு பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசிதழில் அறிவிப்பு

அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை -மஞ்சளாறு வடிநிலக் கோட்டம் கட்டுப்பாட்டிலுள்ள 98 கண்மாய்கள், பெரியாறு வைகை உபவடிநிலக் கோட்டம் கட்டுப்பாட்டில் உள்ள 28 கண்மாய்கள், பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 2 கண்மாய்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 31 கண்மாய்கள் என மொத்தம் 159 கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கண்மாய்களின் விவரங்கள் மற்றும் விண்ணப்பத்தை அருகில் உள்ள தாலுகா அலுவலகம், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம். வண்டல் மண் எடுக்க விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பத்துடன், சிட்டா, அடங்கல், 'அ' பதிவேடு நகல், புல வரைபடம் மற்றும் கிராம வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

சிறப்பு முகாம்கள்

இதுதொடர்பான சிறப்பு முகாம்கள் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி ஆகிய தாலுகா அலுவலகங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. உத்தமபாளையம், போடி தாலுகா அலுவலகங்களில் வருகிற 24-ந்தேதி சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

இந்த முகாமில் நேரடியாக உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்கலாம். விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை இந்த முகாமிலேயே பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும் அன்றைய தினமே சமர்ப்பிக்கலாம். முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் கனிமவளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வண்டல் மண் எடுப்பதற்காக விரைவில் அனுமதி வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்