சீனாவில் சிக்கன விதிகளை மீறியதற்காக 11 ஆயிரத்து 315 அதிகாரிகள் தண்டனை

சீனாவில் சிக்கன விதிகளை மீறியதற்காக 11 ஆயிரத்து 315 அதிகாரிகள் தண்டிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2022-05-30 10:49 GMT

பீஜிங்,

சீனாவில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. 2012ம் ஆண்டில் பணியிடங்களில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவோரை எதிர்கொள்ளும் வகையில் 8 திட்டங்கள் கொண்ட சிக்கன விதிகளை அக்கட்சி வெளியிட்டது. இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நிலையில், ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஒழுங்குமுறை ஆய்வுக்கான மத்திய ஆணையம் மற்றும் தேசிய கண்காணிப்பு ஆணையம் ஆகியவை வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையின்படி நாட்டில் கடந்த ஏப்ரலில் 11,351 பேர் ஊழல் ஒழிப்பு துறையால் தண்டிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கட்சி மற்றும் அரசின் நன்னெறிகளை மேம்படுத்தும் வகையிலான 8 திட்டங்களை கொண்ட விதிகளை அவர்கள் மீறியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் மீது மொத்தம் 7,441 வழக்குகள் பதிவாகி உள்ளன.

அவர்களில் 7,603 பேர் மீது கட்சி ஒழுங்கு அல்லது நிர்வாக ரீதியிலான அபராதங்கள் விதிக்கப்பட்டு உள்ளன. மொத்தமுள்ளவர்களில் 6,411 பேர் அதிகாரத்துவ நடைமுறைகளுக்காகவும் 4,940 பேர் சுயநலம் சார்ந்த செயல்கள் மற்றும் ஆடம்பர நடவடிக்கைகளுக்காகவும் தண்டிக்கப்பட்டு உள்ளனர் என சீன ஊடக நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்