சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா பரவியது - அமெரிக்கா பரபரப்பு புகார்

சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க குடியரசு கட்சி தெரிவித்துள்ளது.

Update: 2021-08-03 01:52 GMT

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.95 கோடியை தாண்டியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க குடியரசு கட்சியின் பார்லி., வெளியுறவு குழு பிரதிநிதி மைக் மெக்கால் கொரோனா குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அதில் , கொரோனா வைரஸ் சீனாவின் உகான் விலங்குகள் சந்தையில் இருந்து பரவவில்லை அது, உகான் வைரஸ் ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூடத்தில் மனிதரை தாக்கும் வகையில் கொரோனா வைரசை உருவாக்கவும், இது பற்றி வேறு யாரும் அறியாதபடி மறைப்பதற்கான பணிகளும் நடந்துள்ளன. இதற்கு நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 

கொரோனா வைரஸ், 2019, செப்டம்பர் 12க்கு முன்பாகவே, உகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியே கசிந்துள்ளதை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் உள்ளன. உகான் ஆய்வகத்தில் அபாயகரமான கழிவுகளை பராமரிக்கும் பிரிவை சீரமைக்க நிதி கோரப்பட்டுள்ளது. இதற்காக, 11 கோடி ரூபாய் ஒதுக்கும்படி ஆய்வக நிர்வாகம் சீன அரசிடம் விண்ணப்பித்துள்ளது. ஆய்வகம் செயல்படத் துவங்கி இரு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அபாயகரமான கழிவுகளைக் கையாளும் வசதி தேவைப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்