ஐயான் சூறாவளி தாக்குதலுக்கு 27 பேர் பலி; தேச சீரமைப்புக்கு சில ஆண்டுகள் ஆகும்: ஜனாதிபதி பைடன்

ஐயான் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்த நிலையில், இது அமெரிக்காவுக்கே ஏற்பட்ட நெருக்கடி என ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டு உள்ளார்.

Update: 2022-10-01 09:42 GMTபுளோரிடா,


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே ஐயான் சூறாவளி புயல் கடந்த புதன்கிழமை மதியம் கரையை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

சூறாவளி கரையை கடந்தபோது 4-ம் பிரிவில் அதிக ஆபத்து நிறைந்த சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது. அடுத்த நாள் (வியாழ கிழமை) அதிகாலை 2 மணி நிலவரப்படி இந்த சூறாவளி வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்றது. அப்போது அதன் வேகம் மணிக்கு 75 மைல்களாக குறைந்து 1-ம் பிரிவில் வகைப்படுத்தப்பட்டது.

ஆர்லேண்டோ மற்றும் கேப் கேனவரெல் பகுதிக்கு இடையே சூறாவளி மையம் கொண்டது. அன்று காலை மத்திய புளோரிடாவையும் பின்னர் மேற்கு அட்லாண்டிக் பகுதியையும் புயல் கடந்து செல்லும் என தேசிய சூறாவளி மையம் தெரிவித்தது. இதனால், ஆரஞ்சு, பிரேவார்டு, செமினோல் மற்றும் வொலூசியா பகுதிகளில் வெள்ள எச்சரிக்கையும் விடப்பட்டது.
 

போர்ட் மையர்ஸ் பகுதியில் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சில கார்கள் நீரில் மூழ்கி காணப்பட்டன. சில இடங்களில் மரங்கள் பலத்த காற்றில் பெயர்ந்து விழுந்தன.

25 லட்சம் பேர் கடலோர புளோரிடா பகுதியில் இருந்து பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டனர். பலர் நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கட்டாயப்படுத்தியும் பலரை அழைத்து செல்ல வேண்டி இருந்தது.

அமெரிக்காவில் சமீபத்திய ஆண்டுகளில் மிக கடுமையாக தாக்கிய தீவிர சூறாவளியாக ஐயான் காணப்படுகிறது. எனினும் இரவுக்கு பின்னர், அதன் வேகம் குறைந்து காணப்பட்டது.

இந்த ஐயான் சூறாவளியானது, கியூபாவையும் தாக்கியது. இதில், அந்நாட்டில் பலத்த காற்று வீசியது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால், 1.1 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். தீவின் மேற்கு பகுதியிலும் பாதிப்பு ஏற்படுத்தியது. கியூபாவின் பினார் டெல் ரியோ மேற்கு மாகாணத்தில் புயலுக்கு 2 பேர் உயிரிழந்தனர். இதன்பின்பு மின் வினியோகம் சீர் செய்யப்பட்டது. கியூபாவில் அகதிகளை ஏற்றி சென்ற படகு ஒன்று கடந்த புதன்கிழமை புயலில் சிக்கியதில் 23 பேரை காணவில்லை.
 

புளோரிடாவை சூறையாடி சென்ற ஐயான் சூறாவளி புயல், தெற்கு கரோலினா கடற்கரையில் 2-வது முறையாக நேற்று கரையை கடந்தது. தீவிர வலுவுடன் தாக்கிய இந்த புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்து உள்ளது.

இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், தேச வரலாற்றில் மிக மோசம் என்ற அளவிலான தரவரிசையில் இந்த சூறாவளி புயல் இடம் பெறும் என்றும், நாட்டை கட்டமைக்க சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதனை புளோரிடாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி அல்ல, அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடி என பைடன் குறிப்பிட்டார்.

புயலால், புளோரிடாவிலும் 10 லட்சத்திற்கும் கூடுதலானோர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் தவித்து வருகின்றனர். வலுவான மற்றும் ஆபத்து நிறைந்த இந்த புயலால், பலரை வீடுகளை விட்டு வெளியேறும்படியும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

கடந்த வியாழ கிழமை வலுவிழந்த சூறாவளியானது, தெற்கு கரோலினா கடற்கரையை அடையும்முன் நேற்று மீண்டும் வலுப்பெற்றது.

இதனால், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய வெள்ளப்பெருக்கு உண்டாக்கும் அளவு மழைப்பொழிவு இருக்கும் என்றும் பலத்த வேகத்தில் புயல் காற்று வீசும் என்றும் அந்நாட்டு தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது என பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.

Tags:    
Show comments

மேலும் செய்திகள்