அமெரிக்க பாப் பாடகி மடோனா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மடோனாவின் உடல்நிலை தேறிய நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-06-30 17:48 GMT

வாஷிங்டன்,

பாப் இசை உலகின் மன்னன் என்று அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சனுக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அமெரிக்க பாடகி மடோனா(வயது 64). ஏழு முறை கிராமி விருது வென்றுள்ள மடோனாவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் இசைத்துறையில் ஈடுபட்டு 40 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக 'செலிப்ரேஷன் டூர்' என்ற பெயரில் உலகெங்கிலும் உள்ள 45 நகரங்களில் இசை கச்சேரிகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென நோய்வாய்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மடோனாவிற்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் மடோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை சரியில்லாததால் அவர் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் மற்றும் பிற வணிகப் பொறுப்புகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மடோனா விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மடோனாவின் உடல்நிலை தேறிய நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வீட்டில் இருந்தபடி மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்