ஐ.நா. சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா ஜோலி திடீர் விலகல்

அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்தின் சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா ஜோலி நேற்று முன்தினம் திடீரென விலகினார்.

Update: 2022-12-17 16:45 GMT

ஆஸ்கார் விருது பெற்ற புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்தில் கடந்த 2001ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். கடந்த 2012ம் ஆண்டு அவர் அந்த ஆணையத்தின் சிறப்பு தூதரக நியமிக்கப்பட்டார்.

47 வயதான ஏஞ்சலினா ஜோலி அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்துடன் இணைந்து 60க்கும் மேற்பட்ட களப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.

பல்வேறு நாடுகளுக்கு சென்று, தங்கள் சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்த கோடிக்கணக்கான மக்களின் அவலத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார்.

சமீபத்தில் அவர் ஏமன் மற்றும் புர்கினா பாசோ நாடுகளுக்கு பயணம் செய்து அங்கு இடம்பெயர்ந்த மக்களை சந்தித்தார்.

இந்த நிலையில் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்தின் சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா ஜோலி முன்தினம் திடீரென விலகினார். மேலும் அந்த ஆணையத்தில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.நா அமைப்பில் 20 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அகதிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நேரடியாக ஈடுபடுவதற்கும், தீர்வுகளுக்கான அவர்களின் வாதங்களை ஆதரிப்பதற்கும் நான் மாற்று வழியில் வேலை செய்ய வேண்டிய நேரம் இது என்று உணர்கிறேன். அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவாக வரும் ஆண்டுகளில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என கூறியுள்ளார்.

ஏஞ்சலினா ஜோலி அகதிகளின் உரிமைகளுக்காக அயராது உழைத்தார் என்றும், அவர் உலகெங்கும் அகதிகளுக்கான விழிப்புணர்வையும் ஆதரவையும் உருவாக்கினார் என்றும் ஐ.நா. பாராட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்