துருக்கிக்கு பயணம் செய்ய வேண்டாம்; குடிமக்களுக்கு இஸ்ரேல் அரசு எச்சரிக்கை

ஈரானின் அச்சுறுத்தலை முன்னிட்டு துருக்கி நாட்டுக்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என தனது குடிமக்களுக்கு இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Update: 2022-05-31 03:42 GMT

டெல் அவிவ்,

ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சி படையின் மூத்த அதிகாரியாக இருந்தவர் ஹசன் சையத் கொடேய். கர்னல் பதவி வகித்த அவரை, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் கடந்த ஞாயிற்று கிழமை சுட்டு கொன்றனர்.

இந்த சம்பவம் ஈரானுக்கு ஆத்திரம் ஏற்படுத்தியது. ஹசன் படுகொலைக்கு இஸ்ரேல் காரணம் என ஈரான் அரசு குற்றச்சாட்டு கூறியது. ஹசன் மரணத்திற்கு பழிவாங்குவோம் என்று உறுதியும் எடுத்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத ஒழிப்பு வாரியம், தனது நாட்டு குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, துருக்கி நாட்டில் சுற்றுலா செல்லும் இஸ்ரேல் நாட்டினர் மீது ஈரான் தாக்க கூடும்.

அதனால், இஸ்ரேல் மக்களுக்கு அதிக ஆபத்து தரும் நாடாக துருக்கி உருவாகி உள்ளது. மக்கள் யாரும் அந்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்து உள்ளது. அதனுடன், ஈரான் நாட்டை ஒட்டிய எல்லை பகுதியில் அமைந்த நாடுகளிலும் அதிக அச்சுறுத்தல் நிலை காணப்படுகிறது.

உலகம் முழுவதும் இஸ்ரேல் நாட்டு மக்களை இலக்காக கொண்டு ஈரான் தாக்க கூடிய சூழ்நிலை உள்ளது. அதனால், பாதுகாப்பு விசயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்