ஹமாஸ் பயங்கரவாதிகள் பணய கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஐ.நா. பொது செயலாளர் வேண்டுகோள்

ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து வைத்துள்ள பணய கைதிகளை உடனடியாக விடுவிக்கும்படி ஐ.நா. பொது செயலாளர் அன்டானியோ குட்டெரஸ் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-10-16 03:28 GMT

நியூயார்க்,

இஸ்ரேல் மீது காசாவின் ஒரு பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த நாட்டுக்கு ஆதரவாக ஆயுத உதவி போன்றவற்றை செய்து வருகின்றன.

ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது என கூறப்படுகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்.

இந்த நிலையில், ஐ.நா. பொது செயலாளர் அன்டானியோ குட்டெரஸ், எக்ஸ் சமூக ஊடக பதிவில் வெளியிட்டு உள்ள செய்தியில், மத்திய கிழக்கு பகுதியில் தற்போது ஏற்பட்டு உள்ள சூழலில், மனிதநேய அடிப்படையிலான இரண்டு வேண்டுகோள்களை முன்வைக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

இதன்படி, ஹமாஸ் அமைப்பினர் நிபந்தனைகள் எதுவுமின்றி பணய கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார். இதேபோன்று, காசாவில் உள்ள மக்களின் நலன்களுக்காக மனிதநேய உதவிகள் விரைவாகவும் மற்றும் தடையின்றியும் கிடைக்க வேண்டும் என இஸ்ரேலுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்