இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பகிர்ந்த சுவிஸ் வங்கி

இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை 5-வது ஆண்டாக இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைத்தது.

Update: 2023-10-09 21:45 GMT

கருப்பு பணம் பதுக்குபவர்களுக்கு உகந்த நாடாக சுவிட்சர்லாந்து திகழ்ந்து வந்தது. இந்தியா உள்பட ஏராளமான நாட்டினர், சுவிஸ் வங்கிகளில் கணக்கு தொடங்கி பணம் போட்டு வைத்துள்ளனர். அவர்களின் வரிஏய்ப்பை அம்பலப்படுத்துவதற்காக, சுவிட்சர்லாந்து அரசுடன் பல நாடுகளும் தானியங்கி தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்தியாவும் இத்தகைய ஒப்பந்தத்தை செய்து கொண்டது.

இதன்படி, ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த நாட்டினர் சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து அளிக்கும். முதல்முறையாக, கடந்த 2018-ம் ஆண்டு 36 நாடுகளுக்கு இந்த தகவல்களை சுவிட்சர்லாந்து அளிக்கத் தொடங்கியது. அவற்றில் இந்தியா இடம் பெறவில்லை.

5-வது ஆண்டு

இருப்பினும், 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்தியாவுக்கு சுவிட்சர்லாந்து தகவல்களை அளிக்கத் தொடங்கியது. தொடர்ந்து, 5-வது ஆண்டாக கடந்த மாதம் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து அளித்துள்ளது. இந்த பட்டியலில், நூற்றுக்கணக்கான இந்தியர்கள், அமைப்புகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்கு விவரங்கள் இடம் பெற்றுள்ளன. ஒருவர் பெயரில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக்கணக்கு விவரங்களும் உள்ளன.

தொழிலதிபர்கள்

பெரும்பாலான கணக்குகள், தொழிலதிபர்களுக்கு சொந்தமானவை. தென்கிழக்கு ஆசிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆப்பிரிக்க நாடுகள், தென்அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் குடியேறிய வெளிநாடுவாழ் இந்தியர்களின் கணக்குகளும் அடங்கும். இந்த பட்டியலில், கணக்குதாரரின் அடையாளம், பெயர், முகவரி, அவர் வசிக்கும் நாடு, வரி அடையாள எண், கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயர், இருப்புத்தொகை, மூலதன வருவாய் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அனைவரின் மொத்த தொகை குறிப்பிடப்படவில்லை. ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை, ஒப்பந்தத்தில் இருப்பதால், அதை தெரிவிக்கவில்லை.

வரிஏய்ப்பு விசாரணை

இந்த தகவல்கள், வரிஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி போன்ற தவறுகள் குறித்த விசாரணைக்கு விரிவாக பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட இந்தியர்கள் தாக்கல் செய்த வருமானவரி கணக்குகளில் உள்ள விவரங்களும், சுவிட்சர்லாந்து அளித்த விவரங்களும் ஒத்துப்போகிறதா என்பதை அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். தங்கள் வருமானத்தை இ்ந்தியர்கள் சரியாக அறிவித்து இருக்கிறார்களா என்று பார்ப்பார்கள்.

இந்தியாவுக்கு மட்டுமின்றி மொத்தம் 104 நாடுகளுக்கும் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து அளித்துள்ளது. சுமார் 2 லட்சம் கணக்கு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, குறிப்பிட்ட நபர்கள் மீதான விசாரணைக்கு தேவையான தகவல்களை இந்தியா கேட்டதன்பேரிலும் சுவிட்சர்லாந்து அடிக்கடி அளித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்