அவரிடம் நேர்மை இல்லை.. தலைமை செயல் அதிகாரியை திடீரென நீக்கிய ஓபன்ஏஐ

ஆல்ட்மேனை பதவியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவை நிர்வாக குழு பெரும் ஆலோசனைக்கு பிறகே எடுத்ததாக ஓபன்ஏஐ தெரிவித்துள்ளது.

Update: 2023-11-18 11:50 GMT

பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். திடீரென இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தையும் ஒபன்ஏஐ தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. அத்துடன், ஒபன்ஏஐ நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக மிரா முராடி நியமிக்கப்பட்டுள்ளார்.

"ஆல்ட்மேனை பதவியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவை நிர்வாக குழு பெரும் ஆலோசனைக்கு பிறகே எடுத்தது. ஆலோசனையின் போது, ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடனான தகவல் தொடர்புகளில் நேர்மையாக இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் நிர்வாக குழுவின் பணிகளில் இடர்பாடு ஏற்படலாம். இதன் காரணமாக ஒபன்ஏஐ நிறுவனத்தை அவர் தொடர்ந்து சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை நிர்வாக குழு இழந்துவிட்டது," என ஒபன்ஏஐ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் விடுவிக்கப்பட்டதும், ஒபன்ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரேக் பிராக்மேன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

ஓபன்ஏஐ அறிமுகப்படுத்திய சாட்ஜிபிடி என்ற சேவை தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்