தாய்லாந்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் பிரதமர் வெற்றி

தாய்லாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா இன்று வெற்றி பெற்றுள்ளார்.

Update: 2022-07-23 08:57 GMT



பாங்காக்,

தாய்லாந்து நாட்டில் அடுத்த ஆண்டு பொது தேர்தல் நடக்க இருக்கிறது. பிரதமராக பிரயுத் சான்-ஓ-சா (வயது 68) பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், பிரதமர் பிரயுத் தலைமையிலான ஆட்சியில் தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் ஊழலை தடுப்பதில் தோல்வி ஆகியவற்றை சுட்டி காட்டி கடந்த 4 நாட்களாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதன் மீது இன்று வாக்கெடுப்பு நடந்தது. இதில் பிரயுத், நம்பிக்கைக்கான 256 வாக்குகளை பெற்றார். எதிராக 206 வாக்குகளும், 9 பேர் வாக்களிக்காமலும் இருந்தனர்.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பிரயுத், 2014ம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்பின்போது அதிகாரத்திற்கு வந்தவர். அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரியாகவும் இருந்து வரும் பிரயுத், அரசியல் எதிரிகளை பெகாசஸ் மென்பொருள் வழியே உளவு பார்த்து வருகிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

நாட்டின் பட்ஜெட்டை தவறாக பயன்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நடந்த வாக்கெடுப்பில் இவர் வெற்றி பெற்ற நிலையில், இவருடன் அமைச்சரவையில் உள்ள 10 மந்திரிகளும் தப்பியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்