டெல்லியில் ஜி-20 மாநாடு - கூட்டுப்பிரகடனம்... ... டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு - லைவ் அப்டேட்ஸ்
டெல்லியில் ஜி-20 மாநாடு - கூட்டுப்பிரகடனம் வெளியீடு
புதுடெல்லி,
வல்லரசுகள் மற்றும் வளரும் நாடுகள் என உலகின் முக்கியமான நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் தலைமையை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது.
மாநாட்டு கருப்பொருள்
ஜி-20 அமைப்பின் தலைவர் என்ற முறையில், இந்த அமைப்பின் 2 நாள் உச்சி மாநாட்டை நடத்துவது இந்தியாவின் பொறுப்பாகும். எனவே இதற்காக கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு தயாராகி வந்தது.
இந்த மாநாட்டை, ‘வாசுதெய்வ குடும்பகம் - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.
உலகத்தலைவர்கள் திரண்டனர்
மாநாட்டுக்காக டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம் தேர்வு செய்யப்பட்டது. அரங்கம் மட்டுமின்றி தலைநகர் முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
டெல்லியில் நடைபெறும் மாநாடு மற்றும் அதன் முடிவுகளை அறிவதற்கு அகில உலகமே ஆவல் கொண்டுள்ளது. எனவே ஒட்டுமொத்த உலகின் கவனமும் டெல்லியை நோக்கியே இருக்கிறது.
இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கடந்த சில நாட்களாகவே டெல்லியில் திரண்டனர். அத்துடன் ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர் களாவும் வந்து சேர்ந்தனர்.
பிரதமர் மோடி வரவேற்றார்
அகில உலகமும் ஆவலோடு எதிர்பார்த்து வந்த ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
முன்னதாக மாநாட்டுக்கு வருகை தந்த உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்த தலைவர்களை அவர் வரவேற்றார்.
மாநாட்டை தொடங்கி வைத்த அவர், ஆப்பிரிக்க ஒன்றியத்தை முறைப்படி ஜி-20 அமைப்பில் இணைத்தார். பின்னர் அவர் உரையாற்றும்போது, உலக அளவில் நிலவி வரும் நம்பிக்கை குறைபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து நடந்த மாநாட்டு அமர்வுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.
கூட்டுப்பிரகடனம் வெளியீடு
மாநாட்டின் முதல் நாளான நேற்றைய நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. இதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன.
இந்த கூட்டுப்பிரகடனத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் முக்கியமாக, பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
* பயங்கரவாதம், இனவெறி, இனவாதம் உள்ளிட்ட சகிப்பின்மையின் பிற வடிவங்கள் அல்லது மதம் மற்றும் நம்பிக்கைகளின் பெயரால் வரும் வன்முறைகள் என பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். இது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். அதேநேரம் அனைத்து மதங்களின் அமைதிக்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கிறோம்.
* சர்வதேச சட்டங்களின் முழுமையான அணுகுமுறை மூலம் பயங்கரவாதத்தை திறம்பட எதிர்கொள்ள முடியும். பயங்கரவாத குழுக்களின் பாதுகாப்பான புகலிடம், செயல்பாட்டு சுதந்திரம், இயக்கம் மற்றும் ஆட்சேர்ப்பு, அத்துடன் நிதி, பொருள் சேர்த்தல் அல்லது அரசியல் ஆதரவை தடுப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பின் செயல்திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகள் பலப்படுத்தப்பட வேண்டும்.
சட்ட விரோத ஆயுத கடத்தல்
* சிறிய ஆயுதங்கள் மற்றும் இலகுரக ஆயுதங்களின் சட்டவிரோத கடத்தல் மற்றும் திசைதிருப்பல் குறித்தும் நாங்கள் கவலை தெரிவிக்கிறோம். இந்த குற்றங்களை எதிர்த்து போராடுவதற்கு அரசுகளுக்கிடையேயான சர்வதேச ஒத்துழைப்பு முக்கியமானது.
சட்ட விரோத நடவடிக்கை களுக்கான நிதியை மீட்பதற்கான உலகளாவிய முயற்சிகளை மேம்படுத்த நிதி நடவடிக்கை பணிக்குழுவின் தற்போதைய பணிகளை நாங்கள் வரவேற்கிறோம்.
இதைத்தவிர கூட்டு பிரகடனத்தில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-
உக்ரைன் போர்
* உக்ரைன் போரை பொறுத்தவரை, பாலியில் நடந்த விவாதத்தை நினைவுகூருகிறோம். அதாவது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட நமது தேசிய நிலைப்பாடுகள் மற்றும் தீர்மானங்களை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
அனைத்து நாடுகளும் ஐ.நா.வின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
அனைத்து நாடுகளும் எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக ஆக்கிரமித்தலை ஏற்படுத்தவோ அல்லது படைகளை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.
அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சகாப்தம் போருக்கானது அல்ல.
ஊழல் ஒழிப்பு
* திறன் இடைவெளிகளை பூர்த்தி செய்யவும், கண்ணியமான வேலைகளை ஊக்குவிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய சமூக பாதுகாப்பு கொள்கைகளை உறுதி செய்வதற்கும் உறுதிபூண்டுள்ளோம்.
* ஊழலுக்கான சகிப்புத்தன்மை இல்லாத எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஊழலைத் தடுப்பதற்கு பொறுப்பான பொது அமைப்புகள் மற்றும் அதிகாரிகளின் நேர்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல் போன்றவை முக்கியமான நடவடிக்கைகள் ஆகும்.
* வலுவான, நிலையான, சீரான வளர்ச்சியை செயல்படுத்துவதற்கும், நமது பருவநிலை நோக்கங்களை அடைவதற்கும் பல்வேறு வழிகளைப் பின்பற்றி சுத்தமான, நிலையான, நியாயமான, மலிவு மற்றும் அதனை உள்ளடக்கிய ஆற்றல் மாற்றங்களை விரைவுபடுத்த நாங்கள் உறுதியளிக்கிறோம்.
சமத்துவ கல்வி
* பின்தங்கிய சூழலில் உள்ளவர்கள் உள்பட அனைவருக்கும் சமத்துவமான, உயர்தர கல்வி மற்றும் திறன் பயிற்சி வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
* செயற்கை நுண்ணறிவின் முழுத்திறனையும் வெளிப்படுத்தவும், அதன் பலன்களை சமமாக பகிர்ந்துகொள்ளவும், ஆபத்துகளைத் தணிக்கவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தவும், சர்வதேச நிர்வாகத்தைப் பற்றிய கூடுதல் விவாதங்களைச் செய்யவும் நாங்கள் ஒன்றாக செயல்படுவோம்.
பாலின சமத்துவம்
* கிரிப்டோ சொத்துகளுக்கான அறிக்கையிடல் கட்டமைப்பை விரைவாக செயல்படுத்துதல் வேண்டும். இத்தகைய நிதி அல்லாத சொத்துகள் பற்றிய தகவல் பரிமாற்றம் 2027-ம் ஆண்டுக்கு முன் தொடங்க வேண்டும் என விருமபுகிறோம்.
* பருவநிலை மாற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடிவு செய்துள்ளோம். பாலின இடைவெளிகளை நீக்கி முடிவுகளை எடுப்பவர்களாகவும் பொருளாதாரத்தில் முழுமையான, சமமான, பயனுள்ள வகையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் நாங்கள் உறுதியளிக்கிறோம்.
இவ்வாறு கூட்டுப்பிரகடனத்தில் கூறப்பட்டு இருக்கிறது.
பிரதமர் மோடி அறிவித்தார்
இந்த பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
மாநாட்டு அரங்கில் இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நண்பர்களே, நமது குழுக்களின் கடின உழைப்பாலும், உங்கள் அனைவரின் ஒத்துழைப்பாலும், டெல்லி ஜி-20 உச்சி மாநாட்டின் கூட்டுப்பிரகடனத்தில் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இந்த பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நான் அறிவிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
அப்போது உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளியிட்டனர்.
உக்ரைன் போரால் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் அது தொடர்பாக உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மாறுபட்ட பார்வைகளுக்கு மத்தியில் இந்த கூட்டுப்பிரகடனத்துக்கு அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்திருப்பது, இந்தியாவின் தலைமை பதவிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி ஆகும்.
வரலாறு படைப்பு
இது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘டெல்லி தலைவர்களின் கூட்டுப்பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதற்காக உழைத்த அனைத்து ஜி-20 உறுப்பினர்களுக்கும், அவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காகவும் நன்றி’ என குறிப்பிட்டு இருந்தார்.
ஜி-20 உச்சி மாநாட்டின் 2-வது நாள் நிகழ்வுகள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகின்றன.
மேலும் படிக்க:- https://www.dailythanthi.com/News/India/g-20-summit-kicks-off-today-with-a-bang-world-leaders-arrive-1048580