ஜி-20 மாநாட்டுக்கு இடையே ஜப்பான் பிரதமரை... ... டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு - லைவ் அப்டேட்ஸ்
ஜி-20 மாநாட்டுக்கு இடையே ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி
டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடனும் சந்திப்பு நடந்தது.
ஜி-20 உச்சி மாநாடு
தலைநகர் டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக வந்துள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதைப்போல வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் ஆகியோரையும் தனித்தனியே சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார்.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேற்று சந்தித்தார். ஜி-20 மாநாட்டின் முதல் அமர்வுக்குப்பின் இந்த சந்திப்பு நடந்தது.
‘நமேஸ்தே’ கூறிய ரிஷி சுனக்
அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக இணைப்புகளை வலுப்படுத்துவது மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக பிரதமர் மோடியை சந்திக்க வந்த ரிஷி சுனக், ‘நமஸ்தே’ எனக்கூறி பிரதமருக்கு வணக்கம் செலுத்தினார்.
இந்த சந்திப்புக்குப்பின் பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ தளத்தில், ‘ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்ததில் மகிழ்ச்சி. வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவது மற்றும் முதலீட்டை அதிகரிப்பது குறித்து நாங்கள் விவாதித்தோம். ஒரு வளமான மற்றும் நிலையான பிரபஞ்சத்துக்காக இரு நாடுகளும் தொடர்ந்து உழைக்கும்’ என குறிப்பிட்டு இருந்தார்.
ஜப்பான் பிரதமர்
இதைப்போல ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவையும் பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். மாநாட்டுக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளியிட்டு இருந்தார்.
இதுகுறித்து அவர், ‘பிரதமர் கிஷிடாவுடன் ஆக்கபூர்வமான பேச்சுகளை நடத்தினேன். இந்தியா-ஜப்பான் இருதரப்பு உறவுகள் மற்றும் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் மற்றும் ஜப்பானின் ஜி-7 தலைமைத்துவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பணிகளை நாங்கள் ஆய்வு செய்தோம். இரு நாடுகளுக்கு இடையேயான இணைப்பு, வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம்’ என கூறியுள்ளார்.
இத்தாலி பிரதமருடன் சந்திப்பு
பின்னர் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
இது தொடர்பாக பிரதமர் தனது எக்ஸ் தளத்தில், ‘பிரதமர் ஜியார்ஜியா மெலோனியுடன் சிறப்பான சந்திப்பு நிகழ்ந்தது. வர்த்தகம், பாதுகாப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பல துறைகளை சார்ந்து எங்கள் பேச்சுவார்த்தை இருந்தது. உலக நலனுக்காக இந்தியாவும், இத்தாலியும் இணைந்து செயல்படும்’ என குறிப்பிட்டு இருந்தார்.
இவ்வாறு மாநாட்டுக்கு இடையே 15-க்கும் மேற்பட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.