திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம்: தவெக கண்டன... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம்: தவெக கண்டன ஆர்ப்பாட்டம் தேதி, இடம் மாற்றம்
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாளை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவெக கண்டன ஆர்ப்பாட்டம் தேதி, இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில்,
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட இடம் அன்றைய தேதியில் வேறு காரணத்திற்குப் பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறி காவல் துறையால் அளிக்கப்பட்ட மாற்று இடத்தில் (சென்னை, சிவானந்தா சாலையில்) 06.07.2025 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.