திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்: தமிழக... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்: தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட்டு
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டார். ஆனால், சட்டம். ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்து தீபம் ஏற்றப்படவில்லை. தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு வாரமாக நாள்தோறும் விரிவாக விசாரித்தனர்
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஜெ.ஜெயச்சந்திரன், கே கே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கினர். அப்போது தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவு செல்லும் என்றும் ,தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் மேற்பார்வை இட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்