உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி - வரலாறு படைத்தது தென் ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 138 ரன்னும் எடுத்தன.
தொடர்ந்து 74 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சில் 56 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் சேர்த்தது. இன்று 4-வது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி, 83 ஓவர்களில் இலக்கை கடந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன் கோப்பையை வென்று தென் ஆப்பிரிக்கா அணி வரலாறு படைத்துள்ளது.