முன்னாள் உலக செஸ் சாம்பியனை வெளிநாட்டு ஏஜெண்டுகள் பட்டியலில் சேர்த்த ரஷிய அரசு
ரஷியாவின் முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி கேஸ்பரோவ். இவர் ரஷிய அதிபர் புதினுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுபவர் என கூறப்படுகிறது. இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய செய்தியொன்றில், புதினின் அரசாட்சிக்கு கீழ் ரஷிய நீதி அமைச்சகம் முரணான ஒன்று. புதின், கிழக்கு ஜெர்மனியில் உள்ள தனது கூட்டாளிகளை உளவு பார்த்தபோதும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள மக்களின் சொத்துகளை திருடியபோதும் நான் என்னுடைய நாட்டின் பிரதிநிதியாக செயல்பட்டேன்.
புதினுக்கு எதிராக இருப்பது என்பது எப்போதும் ரஷியாவுக்கு ஆதரவானவையாகவே இருக்கும் என அவர் தெரிவித்து உள்ளார். இது ரஷிய அரசில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து கேரி கேஸ்பரோவ் மற்றும் முன்னாள் எண்ணெய் வர்த்தகரான மிக்காயில் கோதர்கோவ்ஸ்கை ஆகிய இருவரையும் ரஷிய நீதி அமைச்சகம் வெளிநாட்டு ஏஜெண்டுகள் என்ற பட்டியலில் சேர்த்து உள்ளது. இதனை அந்த அமைச்சகம் தனது வலைதளத்தில் உறுதி செய்துள்ளது. இந்த வெளிநாட்டு ஏஜெண்டு என்பது சோவியத் ரஷியாவுக்கு எதிரானது என்ற வகையில் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.
புதினுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் கோதர்கோவ்ஸ்கைக்கு உக்ரைன் நிதியுதவி செய்து வருகிறது. கேஸ்பரோவின் நிதிகளும் உக்ரைனில் இருந்தும் மற்றும் மனித உரிமைகள் அமைப்பில் இருந்தும் வருகின்றன என வலைதள தகவல் தெரிவிக்கின்றது.