4 மாதங்களாக உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷிய... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் உள்ள நகரின் அனைத்து பாலங்களையும் தகர்த்த ரஷிய படைகள்


4 மாதங்களாக உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷிய படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதை பிரதான இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதில் ரஷிய படைகள் மெதுவாக, அதே சமயம் சீராக முன்னேறி வருகின்றன.

டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியார்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகள் எளிதில் ரஷிய படைகள் வசம் சென்றுவிட்டன. அந்த பிராந்தியத்தில் உக்ரைனின் ஆளுகைக்குள் இருக்கும் ஒரு சில பகுதிகளையும் ரஷியா படைகள் ஆக்கிரமித்துவிட்டால் டான்பாஸ் பிராந்தியம் முழுவதும் ரஷியாவுக்கு சொந்தமாகிவிடும்.

டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய தொழில் நகரமான செவிரோடோனெட்ஸ்க் சமீபத்திய வாரங்களில் கிழக்கு உக்ரைன் போரில் முக்கிய கவனம் பெற்று வருகிறது. அந்த நகரில் 80 சதவீத பகுதிகள் ரஷிய படைகள் வசம் சென்றுவிட்டன.

அனைத்து பாலங்களும் தகர்ப்பு

எஞ்சிய 20 சதவீத பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் செவிரோடோனெட்ஸ்க் நகருக்கு செல்லக்கூடிய அனைத்து பாலங்களை ரஷிய படைகள் தகர்த்துவிட்டன. இதனால் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் துருப்புக்களை வெளியேற்றுவது மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவது சாத்தியமற்றதாகி உள்ளது.

போர் தொடங்குவதற்கு முன்னர் 1 லட்சம் பேர் வாழ்ந்து வந்த செவிரோடோனெட்ஸ்க் நகரில் தற்போது 12 ஆயிரம் பேர் சிக்கியிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் அனைவரும் ரஷிய படைகளின் தாக்குதலால் கடினமான சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Update: 2022-06-14 22:40 GMT

Linked news