நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்படி அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் வெள்ளம் வழிந்தோடுகிறது. பிரம்மபுத்திரா ஆற்றிலும் நீர் வரத்து அதிகரித்து, அதன் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

வருகிற நாட்களில் கூடுதலாக மழை பெய்ய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

இந்த மாநிலங்களில் கனமழை, வெள்ளம் ஆகியவற்றால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், தொடர் கனமழை பெய்து வரும் சூழலில் அசாம், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் மணிப்பூர் கவர்னரை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்.

எந்தவொரு கடினம் வாய்ந்த சூழலையும் எதிர்கொள்வதற்கு சாத்தியப்பட்ட எல்லா உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என உறுதியளித்தேன். வடகிழக்கு மாநில மக்களுக்கு ஒரு பாறை போன்று மோடி அரசு துணையாக நிற்கும் என பதிவிட்டு உள்ளார்.

Update: 2025-06-01 11:52 GMT

Linked news