கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025
கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அரசு கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு, நிரந்தர உதவிப் பேராசிரியர்களுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
ஒரே மாதிரியான பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாடான வகையில் ஊதியம் வழங்கப்படுவது கண்ணியமற்ற செயல் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருக்கும் நிலையில், இதற்கு காரணமான மாநில அரசுகள் தலைகுனிய வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இயங்குவதற்கு காரணமே கவுரவ விரிவுரையாளர்கள்தான். மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் உள்ள 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை 8,000-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துதான் தமிழக அரசு சமாளித்து வருகிறது.
பல கல்லூரிகளில் பல துறைகளில் ஒரே ஒரு நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலையில், அத்துறைகளின் துறைத் தலைவர் பொறுப்புகளையும் கவுரவ விரிவுரையாளர்கள்தான் கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு ரூ.25,000 மட்டுமே ஊதியம் தரப்படுகிறது.