விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்... நாடு முழுவதும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்... நாடு முழுவதும் களைகட்டிய திருவிழா
நாடு முழுவதும் இன்று (27.8.2025) விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொணடு விநாயகரை தரிசனம் செய்கின்றனர். இதனால் கோவில்களில் வழக்கத்தைவிட இன்று கூட்டம் அதிகாக காணப்படுகிறது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்கின்றனர்.
வீடுகளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் மக்கள், விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் போன்ற நைவேத்யங்களை படைத்து பூஜை செய்கின்றனர். இதேபோல் கோவில்கள் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ இந்து பரிசத், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், விதவிதமான பொருட்களைக் கொண்டு, விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை செய்து பிரமிக்க வைத்துள்ளனர்.