சொன்னார்களே... செய்தார்களா? - தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் தொடங்கிய பிறகு விக்கிரவாண்டி, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்ட மாநாடுகளை நடத்தினார். அதன் பிறகு, சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த 13-ந் தேதி முதல் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், கடந்த 2 வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரத்தை நிறைவு செய்த விஜய், இன்று நாமக்கல், கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். வழிநெடுக அவருக்கு த.வெ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

நாமக்கல் பி.கே.புதூர் பகுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் வாகனம் மீது நின்றபடி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதாவது:-

“சாரி, கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. சாப்டீங்களா எல்லாரும்? போக்குவரத்து ஹப் ஆக உள்ள நாமக்கலும், முட்டையும் ரொம்ப பேமஸ். தமிழ்நாட்டு மக்களுக்கு சத்தான உணவான முட்டையை கொடுக்கும் ஊராக மட்டுமில்லாமல், உணர்ச்சியூட்டும் மண்ணும் இதுதான். அண்ணன் கேப்டன் பேசிய, 'தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்ற நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரிகளை எழுதியவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் தமிழ்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதும், நாமக்கல்லை சேர்ந்த சுப்புராயன் அவர்கள் தான்.

இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதில் மிகப்பெரிய பங்குடைய, சென்னை மாகாண முதல்வராக பதவியேற்ற முதல் தமிழர் சுப்புராயன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டிக்கொடுப்பதாக வாக்குறுதி எண் 456-ல் கொடுத்தது யாரு? சொன்னாங்களே... செஞ்சாங்களா?" நாமக்கல்லில் முட்டை சேமிப்புக்கிடங்கு, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை பலஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. திமுகவுக்கு போடும் ஓட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு. திமுக - பாஜக மறைமுக உறவு. 2026-ல் தவெக - திமுக இடையேதான் போட்டி. நம்பிக்கையோடு இருங்கள்...சத்தியமாக பார்த்திடலாம்..இரண்டில் ஒரு கை பார்ப்போம் என்றார்.

Update: 2025-09-27 09:31 GMT

Linked news