மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி: தாய், மகன் உள்பட 5 பேர் மீது வழக்கு

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்த தேனியை சேர்ந்த தாய், மகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-27 14:21 GMT

பட்டதாரி வாலிபர்

தேனி அல்லிநகரம் ஒண்டிவீரன் நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் சிவா (வயது 25). பி.எஸ்சி. பட்டதாரி. இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனது உறவினர் தேனியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்தார். அதே கடையில் தேனி சிவராம் நகரை சேர்ந்த மகாராஜன் மகன் பொன்ராம் என்பவர் வேலை பார்த்தார். எனது உறவினர் மூலமாக பொன்ராம் எனக்கு அறிமுகம் ஆனார்.

கடந்த 2020-ம் ஆண்டு பொன்ராம் என்னை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது அங்கு அவருடைய தாய் பூங்கொடி, அக்காள் ரஞ்சீப், சின்னமனூரை சேர்ந்த சந்தானம் என்ற ராஜா ஆகியோர் இருந்தனர். அவர்கள் உத்தமபாளையம் அம்மாபட்டி விலக்கு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மூலமாக பலருக்கும் அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும், எனக்கும் மதுரை மாநகராட்சியில் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறினர். அதற்கு ரூ.6 லட்சம் கேட்டனர்.

ரூ.3 லட்சம் மோசடி

நான் வங்கி மூலமாக ரூ.1 லட்சமும், நேரில் ரூ.2 லட்சமும் என மொத்தம் ரூ.3 லட்சம் அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் என்னை மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியில் வரி வசூல் செய்யும் பணிக்கு தற்காலிகமாக சேர்த்து விட்டனர். அதற்கு சம்பளமும் தரவில்லை. பின்னர் எந்த பணி நியமன உத்தரவும் பெற்று கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீமைராஜ் இதுகுறித்து விசாரணை நடத்தினார். இந்த மோசடி தொடர்பாக பூங்கொடி, அவருடைய மகன் பொன்ராம், மகள் ரஞ்சீப், சந்தானம், செந்தில்குமார் ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிறையில் 3 பேர்

இதில் பூங்கொடி, ரஞ்சீப், சந்தானம் ஆகிய 3 பேரும், மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக மற்றொரு வழக்கில் கூடலூர் வடக்கு போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பூங்கொடி, ரஞ்சீப் ஆகிய இருவரும் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கிளை சிறையிலும், சந்தானம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்