நகர பகுதியில் 150 விநாயகர் சிலைகள் நாளை கடலில் கரைப்பு

150 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நாளை கடலில் கரைக்கப்படுவதை தொடர்ந்து நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-09-21 17:46 GMT

புதுச்சேரி

150 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நாளை கடலில் கரைக்கப்படுவதை தொடர்ந்து நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

150 சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சதுர்த்தி விழா பேரவை மற்றும் இந்து முன்னணி சார்பில் புதுவையில் 150 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகள் நாளை (வெள்ளிக்கிழமை) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.

இந்த ஊர்வலம் சாரம் அவ்வை திடலில் இருந்து தொடங்கி காமராஜர் சாலை, நேருவீதி, காந்தி வீதி, பட்டேல் சாலை, கடற்கரை சாலை வழியாக எடுத்து செல்லப்பட்டு கிரேன் உதவியுடன் கடலில் இறக்கப்பட்டு கரைக்கப்படுகிறது. மேலும் ஊர்வலம் செல்லும் பாதையில் மதுக்கடைகளையும் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது. இதேபோல் நகர பகுதியில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சிலை ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட 150 விநாயகர் சிலை ஊர்வலம் நாளை நடக்கிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் தடுக்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புஸ்சி வீதி, ஆம்பூர் சாலை, முத்தியால்பேட்டை வழியாக காலாப்பட்டு மற்றும் சென்னை செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள் புதுவை பஸ் நிலையத்தில் இருந்து வெங்கட்டாசுப்பா ரெட்டியார் சதுக்கம், இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம் வழியாக காலாப்பட்டு செல்ல வேண்டும்.

அதேபோல் கிழக்கு கடற்கரையில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் வீதி வழியாக சிவாஜி சிலை, கொக்குபார்க், ராஜீவ்காந்தி சதுக்கம், இந்திராகாந்தி சதுக்கம், நெல்லித்தோப்பு வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும்.

போக்குவரத்துக்கு தடை

மேலும் காமராஜர் சாலை (லெனின் வீதி முதல் ராஜா தியேட்டர் வரை) நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து விதமான வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்படுகிறது. விநாயகர் சிலை ஊர்வலம் நேரு வீதியை கடக்கும் வரை அண்ணாசாலையில் பிற்பகல் 3 மணி முதல் அனைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அந்த வாகனங்கள் 45 அடி சாலை மற்றும் ஒதியஞ்சாலை சந்திப்புகளில் திருப்பி விடப்படும்.

நேருவீதி, காந்தி வீதி, எஸ்.வி.பட்டேல் சாலையிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்