புதுவை அரசு துறைகளில் ரூ.28 கோடி முறைகேடு
புதுவை அரசு துறைகளில் ரூ.28 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசின் கடன் தொகை ரூ.12,583 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவை அரசு துறைகளில் ரூ.28 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசின் கடன் தொகை ரூ.12,583 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தணிக்கை அறிக்கை
புதுச்சேரி சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் உள்ள விவரம் குறித்து தமிழ்நாடு- புதுச்சேரி முதன்மை அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் 2020-21ம் ஆண்டு ரூ.240 கோடியாக இருந்த மூலதன செலவினம் 2021-22-ல் ரூ.163 கோடியாக குறைந்தது. அதனால் நிதிப்பற்றாக்குறை ரூ.1,615 கோடியில் இருந்து ரூ.1,052 கோடியாக குறைந்தது. 2021-22ல் வருவாய் வரவினங்கள் முந்தைய ஆண்டை விட ரூ.1,969 கோடியாக அதிகரித்தது. மத்திய அரசிடம் இருந்து 2021-22ம் ஆண்டு ரூ.2,439 கோடி உதவி, மானியமாக பெறப்பட்டது.
ரூ.12,593 கோடியாக கடன் அதிகரிப்பு
பொதுப்பணித்துறை, மின்துறைகளில் 34 முடிவடையாத திட்டங்களால் ரூ.114.31 கோடி முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-18ல் ரூ.8,799 கோடியாக இருந்த கடன்கள் 2021-22ல் ரூ.12 ஆயிரத்து 593 கோடியாக அதிகரித்துள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் மறுநிதி ஒதுக்கம் செய்யப்பட்ட 70 பணிகளில் ரூ.45 கோடியே 33 லட்சம் முழுவதும் தேவையற்றதானது. இதில் 15 பணிகளில் எந்த செலவும் செய்யப்படவில்லை.
769 அரசு பணிகளில் ரூ.502 கோடியே 16 லட்சத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழ்கள் நிலுவையில் இருந்தன. இதில் ரூ.37 கோடியே 91 லட்சத்திற்கான 199 பயன்பாட்டுச் சான்றிதழ்கள் 9 ஆண்டு காலத்துக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.
கணக்கு தராத அமைப்புகள்
அதிகாரிகளால் பெறப்பட்ட ரூ.130 கோடியே 70 லட்சத்திற்கான 1,100 தற்காலிக முன்பணங்களுக்கான கணக்குகள் தரப்படவில்லை. இதில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ரூ.17 கோடியே 65 லட்சத்திற்கான 296 தற்காலிக முன்பணங்களின் கணக்கு தரப்படவில்லை.
மொத்தம் உள்ள 70 அமைப்புகளில் 61 அமைப்புகள் மற்றும் குழுமங்கள் தணிக்கைக்கு கணக்கு தரவில்லை. இதில் 17 அமைப்புகள், குழுமங்கள் 5 ஆண்டுகளுக்கு மேலாக கணக்குகளை தரவில்லை. இது தொடர்பாக புகாரும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.27.98 கோடி முறைகேடு
மார்ச் 2022 வரை பல்வேறு அரசு துறைகளில் 322 பணிகளில் ரூ.27 கோடியே 98 லட்சம் முறைகேடு, இழப்பு, களவு மற்றும் கையாடல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 5 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.38 கோடியே 48 லட்சம் லாபத்தையும், 7 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.49 கோடியே 87 லட்சம் நஷ்டத்தையும் அடைந்துள்ளன. புதுச்சேரியில் 12 அரசுத்துறை நிறுவனங்களின் கணக்குகள் இறுதி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முதன்மை துணை அக்கவுண்டன்ட் ஜெனரல் வர்சினி அருண், முதன்மை தணிக்கை அதிகாரிகள் மெய்யப்பன், மணிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.