களை இழந்து காணப்படும் கலையரங்கம்
மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் கிராமத்தில் கலையரங்கத்தை சீரமைக்கவும், கழிப்பறையை சுத்தம் செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
அரியாங்குப்பம்
மணவெளி தொகுதியில் பூரணாங்குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், திரவுபதி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் நடைபெறும் திருவிழா காலங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பெரிய மந்தை திடலில் கடந்த 2009-ம் ஆண்டு கலையரங்கம் கட்டப்பட்டது. அதன்பிறகு சரிவர பராமரிக்காததால் கலையரங்கம் களையிழந்து காணப்படுகிறது. மேலும் அங்குள்ள கழிப்பறையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இந்தநிலையில் வருகிற ஜூலை மாதம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி கலையரங்கத்தை சீரமைக்கவும், கழிப்பறையை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.