அடிப்படை வசதிகள் இல்லாத ஆனந்தா நகர்

தவளக்குப்பம் ஆனந்தா நகரில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2023-07-16 17:03 GMT

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் ஆனந்தா நகரில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மோசமான சாலை

மணவெளி தொகுதி தவளக்குப்பத்தில் ஆனந்தா நகர் உள்ளது. இங்கு 7-க்கும் மேற்பட்ட குறுக்கு தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகர் உருவாகி சுமார் 20 ஆண்டுகள் ஆகியும் மண் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது.

தெருக்கில் சாக்கடை கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையின் குறுக்கே செல்கிறது. சில இடங்களில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது.

மழை காலங்களில் தண்ணீர் தெருக்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. பல நாட்கள் இதே நிலை நீடிப்பதால், விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகாக உள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர்.

சபாநாயகரிடம் முறையீடு

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த சபாநாயகர் செல்வத்திடம் அப்பகுதி மக்கள் தங்களது குறைகளை முறையீட்டனர்.

ஆனந்தா நகரில் விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்