நகைக்கடை உரிமையாளர் வீட்டில்மர்ம பொருள் வெடித்து கதவு தகர்ப்பு

புதுவை ரெயின்போ நகரில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் மர்ம பொருள் வெடித்து கதவு தகர்ந்தது. வீட்டில் இருந்த பெண் படுகாயமடைந்தார்.

Update: 2023-02-06 17:19 GMT

புதுச்சேரி

புதுவை ரெயின்போ நகரில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் மர்ம பொருள் வெடித்து கதவு தகர்ந்தது. வீட்டில் இருந்த பெண் படுகாயமடைந்தார்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகைக்கடை உரிமையாளர்

புதுச்சேரி ரெயின்போ நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது50). இவர் பாரதி வீதியில் சொந்தமாக நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சாரதா (43). இவர்களுக்கு ஜெகன், மாதவன் என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் தந்தைக்கு உதவியாக நகைக்கடையை கவனித்து வருகிறார்கள்.

இன்று காலை வழக்கம் போல் குருமூர்த்தி தனது மகன்களுடன் கடைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் சாரதா மட்டும் தனியாக இருந்தார்.

இந்தநிலையில் பகல் சுமார் 11½ மணியளவில் குருமூர்த்தி வீட்டில் இருந்து திடீரென்று வெடிகுண்டு வெடித்ததுபோல பயங்கர சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஏதோ அசம்பாவிதம் நடந்ததை உணர்ந்து வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்து பார்த்தனர்.

பெயர்ந்து விழுந்த நிலைக்கதவு

இதில் குருமூர்த்தியின் வீட்டு முன்பக்க நிலைக்கதவு சுவரை உடைத்துக் கொண்டு பெயர்ந்து தெருவில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஜன்னல் கண்ணாடிகள், இருக்கைகள் உள்ளிட்டவையும் உடைந்து ஆங்காங்கே சிதறிக் கிடந்தது தெரியவந்தது. வீட்டுக்குள் இருந்த சாரதாவும் பலத்த காயங்களுடன் கிடந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கியாஸ் சிலிண்டர் வெடித்ததா?

முதலில் குருமூர்த்தி வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்துவிட்டது என தகவல் பரவியது. உடனே தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் வீட்டில் இருந்த 3 கியாஸ் சிலிண்டர்களும் எந்த சேதமும் இல்லாமல் இருந்தது. எனவே கியாஸ் வெடிக்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பட்டாசு வெடித்தது போன்ற வாசனை வந்துள்ளது. இதையடுத்து வீட்டில் எதுவும் வெடி பொருட்கள் இருக்கிறதா? என போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. குருமூர்த்தி, நகை, வட்டிக்கடை வைத்திருப்பதால் நகை தொழிலுக்கான ஏதாவது மூலப்பொருட்களை வீட்டில் வைத்திருந்து வெடித்து சிதறி இருக்கலாம் என கூறப்படுகிறது.

பக்கத்து வீடுகளிலும் அதிர்வு

மர்மப் பொருள் வெடித்ததில் வீட்டின் மின்விசிறி, சமையல் அறையில் இருந்த பொருட்கள், ஹாலில் உள்ள இருக்கைகள், ஜன்னல் கண்ணாடிகள் என அனைத்தும் உடைந்து நாலாபுறமும் சிதறிக்கிடந்தன. அதேபோல் முதல் மாடியில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தது. இந்த அதிர்வு பக்கத்து வீட்டிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குருமூர்த்தி வீட்டின் பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

சம்பவ இடத்திற்கு புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, கிழக்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜிந்தா கோதண்டராமன், பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர் விஜயகுமார் தலைமையில் குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

தடயங்கள் சேகரிப்பு

போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தாகோதண்டராமன் கூறுகையில், 'நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் வெடிகுண்டு வெடித்தது போன்ற சம்பவம் நடந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். என்ன பொருள் வெடித்தது என்பது தெரியவில்லை. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவில் தான் வெடித்தது என்ன என்பது பற்றிய விவரம் என்பது குறித்து தெரியவரும். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்