பாகூர் மூலநாதர் கோவில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி எளிமையாக நடந்தது

இரு தரப்பினர் இடையே பிரச்சினையால் பாகூர் மூலநாதர் கோவில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி எளிமையாக நடந்தது. திருவிழா நடத்துவது குறித்து நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.

Update: 2023-06-18 17:26 GMT

பாகூர்

இரு தரப்பினர் இடையே பிரச்சினையால் பாகூர் மூலநாதர் கோவில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி எளிமையாக நடந்தது. திருவிழா நடத்துவது குறித்து நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.

கோஷ்டி பூசல்

பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்துவதில் இரு கோஷ்டி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இந்த பிரச்சினையால் கோவிலில் எந்த நிகழ்வு நடந்தாலும் அவ்வப்போது கோஷ்டி பூசல் ஏற்பட்டு வந்தது. இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா தொடங்கும் முன்பே அறங்காவலர் குழுவினர் பதவி விலகினர். இதனால் பிரம்மோற்சவ விழா தேரோட்டத்திற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாமல் இருந்து வந்தது.

எளிமையாக நடந்தது

வழக்கமாக ஆனி மாதம் அமாவாசை தினத்தில் பிரம்மோற்சவ விழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறும். கோஷ்டி பூசல்களால் விழா நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று  இரவு இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழி உத்தரவால் இன்று அதிகாலை ஒரு சிலரைக்கொண்டு பிரம்மோற்சவ விழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி எளிமையாக நடந்தது.

 நாளை ஆலோசனை

மேலும் பந்தல் அமைக்கும் பணி, கோவில் பத்திரிக்கை, மற்ற நிகழ்ச்சிக்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாமல் இருக்கிறது. இதுதொடர்பாக நாளை (திங்கட்கிழமை) இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதனால் கோவில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடக்குமா?, தேரோட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்