மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பு?

புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

Update: 2023-06-26 17:07 GMT

புதுச்சேரி

புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

மணக்குள விநாயகர்

புதுவையில் கோவில் நிலம் அபகரிப்பு என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பாரதி வீதி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக வில்லியனூர் சார்பதிவாளர் சிவசாமி உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலம் வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் இருப்பதும், சுமார் ஒரு ஏக்கர் அளவுள்ள அந்த நிலத்தை சிலர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் கோவில் நிலம் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு

அதாவது வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலம் கோவிலுக்கு வாங்கப்பட்டது. அதில் வில்லியனூரை சேர்ந்த ஜெயராமன் நாயக்கர் என்பவர் விவசாயம் செய்து கோவிலுக்கு குத்தகை செலுத்தி உள்ளார். தற்போது அவர் விவசாயம் செய்யவில்லை.

கடந்த 15 ஆண்டுகளாக அந்த இடம் காலியாக இருந்து வருகிறது. அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதன் அருகில் உள்ள நகர்களில் வசிக்கும் மக்கள் அந்த இடத்தை பாதையாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

ரூ.5 கோடி மதிப்பு

சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள அந்த இடத்தை பாதுகாக்க தற்போது கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக நிலத்தை சுற்றிலும் வேலி அமைக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது பிரச்சினைகள் ஏதும் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் இதற்கான பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் இந்து அறநிலையத்துறைக்கு கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் பாதுகாப்பு வழங்குமாறு வில்லியனூர் காவல்நிலையத்துக்கும் கடிதம் வழங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்