குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய கலெக்டர்

இதயத்தில் ஓட்டை விழுந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு கலெக்டரின் உதவியால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

Update: 2023-08-17 15:54 GMT

காரைக்கால்

இதயத்தில் ஓட்டை விழுந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு கலெக்டரின் உதவியால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

குறைதீர்க்கும் முகாம்

புதுச்சேரி கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. இந்த மாதம் 15-ந்தேதி சுதந்திர தின விடுமுறை என்பதால் அதற்கு பதிலாக இன்று நடந்தது.

முகாமிற்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த மாதத்தில் பெறப்பட்ட 102 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 116 மனுக்கள் பெறப்பட்டன. இதில் குறிப்பாக அரசு ஆஸ்பத்திரியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். மஞ்சள் நிற ரேஷன் கார்டை சிவப்பு நிறமாக மாற்ற வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று பலர் மனு கொடுத்தனர்.

கண்ணீர் மல்க மனு

மேலும் சதாம் உஷேன் என்பவர் தனது ஒரு வயது பெண் குழந்தை சப்ரினாவுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதால், இதய அறுவை சிகிச்சைக்கு உதவவேண்டும் என கண்ணீர்மல்க கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

இதை கேட்ட கலெக்டர் குலோத்துங்கன் உடனடியாக சென்னை ராமச்சந்திரா ஆஸ்பத்திரிக்கு தொடர்பு கொண்டு குழந்தைக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று பெறப்பட்ட மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட மக்களுக்கு முறைப்படி தெரிவிக்கவேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்