எண்ணங்கள் உறுதியாக இருந்தால் இலக்குகளை அடைய முடியும்

புதுவையில் எண்ணங்கள் உறுதியாக இருந்தால் இலக்குகளை அடைய முடியும் என்று மாணவர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார்.;

Update:2023-05-20 22:28 IST

புதுச்சேரி

எண்ணங்கள் உறுதியாக இருந்தால் இலக்குகளை அடைய முடியும் என்று மாணவர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார்.

கலந்துரையாடல்

மத்திய அரசின் ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் மத்திய கல்வி அமைச்சகத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் யுவா சங்கம் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. இந்த மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சியின் மூலமாக புதுவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்காளத்தை சேர்ந்த 45 மாணவர்கள் கொண்ட குழுவினருடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துரையாடினார்.

அப்போது மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

எண்ணங்கள் உறுதியானால்...

நாம் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றால் வேறுபட்டாலும் அனைவரும் இந்தியத்தாயின் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் வாழ்கிறோம். நம்முடைய எண்ணங்கள் உறுதியாக இருந்தால் நமது இலக்குகளை அடைய முடியும். மற்றவர்கள் மீது கரிசனமும், அக்கறையும் இருந்தால் தலைமை பொறுப்புக்கு வர முடியும்.

சமுதாயத்தில் பெண்கள் இன்றும் சவால்களை சந்தித்து வருகிறார்கள். அவற்றை எதிர்கொண்டு முன்னேற வேண்டும். தடைகளை வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள வேண்டும். சமுதாய மாற்றத்தை நாம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். சிறிய மாற்றங்கள் தான் பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

இயற்கையை கொண்டாடுங்கள்

இயற்கையை பாதுகாக்க வேண்டும். இப்போது பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகிறது. நமது முன்னோர்கள் கொடுத்த அழகான பூமியை நாம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கவேண்டும். அதற்கு மரங்களை நட்டு இயற்கையை கொண்டாடுங்கள்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்