பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
அதிகாரிகளின் அலட்சியத்தால் புதுவையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.;
புதுச்சேரி
அதிகாரிகளின் அலட்சியத்தால் புதுவையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மறைமுக ஏற்றுமதி
நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் அரசு பிளாஸ்டிக்கால் ஆன பைகளை தடை செய்து ஆணை வெளியிட்டுள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் இதற்கான முயற்சிகள் எதுவும் செய்யவில்லை.
புதுச்சேரி நகராட்சி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை உபயோகத்தை தவிர்க்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மாறிமாறி கூறி வருகின்றனர்.
புதுவை மாநிலம் பிற மாநிலங்களுக்கு மறைமுகமாக பிளாஸ்டிக் பை ஏற்றுமதி செய்யக்கூடிய இடமாக மாறி வருகிறது. புதுவை அரசு அதிகாரிகளும் இதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
அதிகாரிகள் அலட்சியம்
புதுவையில் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க அரசு அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். பிளாஸ்டிக் இல்லா புதுச்சேரியை உருவாக்கவேண்டும். தீபாவளியன்று சேர்ந்த 400 டன் குப்பைகளில் 300 டன் குப்பைகள் பிளாஸ்டிக் குப்பைகளே ஆகும். எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிர்வாகம், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அதிக அளவில் முயற்சி எடுக்கப்படுகிறது. சில மாநிலங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை முற்றிலும் உபயோகிக்காத மாநிலமாக மாறிவிட்டது. ஆனால் புதுச்சேரியில் அதிகாரிகள் பெயருக்காக ஆய்வு செய்து வருகின்றனர். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது.
நடவடிக்கை
பருவமழை விரைவில் தொடங்க இருப்பதால், மக்கள் பயன்படுத்தும் அனைத்து பிளாஸ்டிக்குகளும் கழிவுநீர் வெளியேறும் வாய்க்காலில் அடைத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு முழு காரணம் துறை சார்ந்த அரசு அதிகாரிகளே என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க. முன்வைக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்காமல் அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் கூறியுள்ளார்.