நாடாளுமன்ற தேர்தலில் நாராயணசாமி போட்டியிட தயாரா?
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாரா? என அ.தி.மு.க. அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.;
புதுச்சேரி
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாரா? என அ.தி.மு.க. அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தரம் தாழ்ந்து விமர்சனம்
புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி ஒருமுறை கூட முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. அது புதுவையில் இருண்ட ஆட்சி காலமாகும். அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. தற்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவரை, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தற்போது கூட பட்ஜெட்டில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத விதத்தில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி, விதவை பெண்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்வு, அனைத்து பெண்களுக்கும் இலவச பஸ் போக்குவரத்து போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
ரூ.300 கோடி தேவை
இந்த திட்டத்தை செயல்படுத்த பணம் எங்கிருந்து வருகிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் கேள்வி எழுப்புகிறார். இந்த திட்டங்களை செயல்படுத்த சுமார் ரூ.300 கோடி பணம் தேவைப்படும். மொத்த பட்ஜெட்டில் 100 சதவீதத்தை எந்த அரசாலும் எட்ட முடியாது. பல துறைகளில் குறைவாக செலவு செய்யக்கூடிய பணத்தை திருத்தி அமைக்கப்பட்ட பட்ஜெட்டில் மூலம் மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்ற முடியும். அப்படியே இல்லையென்றாலும் கலால்துறையின் சாதாரண வரி விதிப்பின் மூலம் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
அறிவிக்கப்பட்ட நல்ல திட்டங்களை பாராட்ட மனம் இல்லாமல் மக்களிடம் நாராயணசாமி பொய்யான தகவலை எடுத்துக்கூறி குழப்பதை ஏற்படுத்துகிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சி மீது உண்மையான அக்கறை இருந்தால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட தயாரா? அப்படி அவர் போட்டியிட்டால் அவரை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.