இறந்தவருக்கு நடுரோட்டில் இறுதிசடங்கு செய்யும் அவலம்
கருமாதி கொட்டகை இல்லாததால் இறந்தவருக்கு நடுரோட்டில் இறுதி சடங்கு செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.;
திருபுவனை
கருமாதி கொட்டகை இல்லாததால் இறந்தவருக்கு நடுரோட்டில் இறுதி சடங்கு செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கருமாதி கொட்டகை
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து திருபுவனை தொகுதியில் திருவண்டார்கோவில் பெரியபேட் கிராமம் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் யாரேனும் இறந்தால் இறுதிசடங்கு செய்ய கருமாதி கொட்டகை இல்லை.
இதனால் அவர்கள், புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் விநாயகர் கோவில் எதிரில் இருந்த பழமையான ஆலமரத்தின் அடியில் இறுதிசடங்கு அருகில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வார்கள்.
இந்தநிலையில் புதுச்சேரி-விழுப்புரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணியால் ஆலமரம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் சாலை அமைக்கப்பட்டது. இதனால் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய இடம் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
நடுரோட்டில் கருமகாரிய நிகழ்ச்சி
கடந்த சில நாட்களுக்கு முன் இறந்து போன ஒருவருக்கு 16-ம் நாள் கரும காரிய நிகழ்ச்சி நடத்த உறவினர்கள் முடிவு செய்தனர். ஆனால் கருமாதி கொட்டகை இல்லாததால் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே உறவினர்கள் கரும காரிய நிகழ்ச்சிகளை நடத்தினர். 2 பக்கமும் வாகனங்கள் செல்லும் வழியில் சாலையின் நடுவே கரும காரிய நிகழ்ச்சி நடந்தது பொதுமக்களை மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே அந்த பகுதி மக்களின் நலன்கருதி அங்கு கருமாதி கொட்டகை அமைக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.