காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா
காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா, வருகிற 11-ந் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது.;
காரைக்கால்
காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா, வருகிற 11-ந் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது.
மாங்கனித் திருவிழா
காரைக்கால் மாவட்டத்தில் மாங்கனித்திருவிழா என்பது 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் ஒரு மாங்கனி தொடர்பாக நிகழ்ந்த நிகழ்வாகும். அது இன்றளவும் நினைவு கூரத்தக்க வகையில் காரைக்காலில் உள்ள சுந்தராம்பாள் உடனாய கயிலாசநாத சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் ஆனி மாதம் விழா நடத்தப்பட்டு வருகிறது.
வரலாற்று புகழ்மிக்க காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா வருகிற 11-ந் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது.
திருக்கல்யாணம்
முக்கிய நிகழ்ச்சியாக 12-ந் தேதி காலை 11 மணிக்கு புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் (சிவன்) வெள்ளை சாத்தி புறப்பாடும், 13-ந் தேதி பிச்சாண்டவ மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்தி களுக்கு மகா பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு, பிச்சாண்டவர் பவழக்கால் விமானத்தில் பத்மாசத்தமர்ந்து, வேதபாராயணத்துடன் வாத்தியங்கள் முழங்க வீதியுலா நிகழ்ச்சியும், அதேசமயம், பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பந்தல் அமைப்பு
14-ந் தேதி அதிகாலை, சிவ தரிசனப்பயனைத்தரும் பஞ்சமூர்த்திகளும், கயிலாச வாகனத்தில் எழுந்தருளி காரைக்கால் அம்மையாருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவில் சுவாமி தேர் வீதியுலாவின்போது, வீட்டு மாடிகளில் நின்று கொண்டு சுவாமி மீது மாங்கனிகளை பக்தர்கள் வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் கோவில் உள்ள பாரதியார் சாலையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில், மாங்கனித் திருவிழாவை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் சமாதான கமிட்டி உறுப்பினர்களுடன் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில், துணை கலெக்டர்கள் ஆதர்ஷ் (வருவாய்), பாஸ்கரன் (பேரிடர் மேலாண்மை) மற்றும் காவல், பொதுப்பணி, மின்சாரம், நலவழி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கலெக்டர் முகமது மன்சூர் பேசியதாவது:-
முன்னெச்சரிக்கை
காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவிற்கு வரும் மக்களுக்கு, தடையின்றி சுத்தமான குடிநீர் வழங்கவும், மருத்துவ முகாம் அமைக்கவும், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கோவில் அருகில் 24 மணி நேரமும் தயார் நிலையில் நிறுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மாவட்ட வேளாண்துறை மூலம் பவழக்கால் விமானம் செல்லும் பாதைகளில் மரக்கிளையை கழிக்கவும், தொங்கும் கேபிள் வயர்களை ஒழுங்குப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். எரியாத தெரு விளக்குகளை மாற்ற வேண்டும். முக்கியமாக, பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.