காரைக்காலில் கடையடைப்பு போராட்டத்தால் பாதிப்பு இல்லை
புதுச்சேரி அரசின் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காரைக்காலில் நடந்த கடையடைப்பு போராட்டத்தால் பாதிப்பு இல்லை. பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் ஓடின.;
காரைக்கால்
புதுச்சேரி அரசின் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காரைக்காலில் நடந்த கடையடைப்பு போராட்டத்தால் பாதிப்பு இல்லை. பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் ஓடின.
பிரீபெய்டு மின்மீட்டர் திட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை உடனே கைவிட வலியுறுத்தியும் காரைக்கால் மக்கள் போராட்டக்குழு சார்பில் காரைக்காலில் கடையடைப்பு போராட்டத்திற்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு சில அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. அதன்படி இன்று காலை 6 மணிக்கு கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. .
கடைகள் திறப்பு
காரைக்காலில் வணிகத் திருவிழா நடைபெற்று வருவதால், கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர் சங்கத்தினர் ஆதரவு தெரிவிக்கவில்லை.
இதனால் கடைகளை திறப்பதா? வேண்டாமா? என்ற தயக்கத்தில் பலர் கடைகளை மூடியிருந்தனர். காலை 9 மணிக்கு மேல், காரைக்கால் பாரதியார் வீதி, திருநள்ளாறு வீதி, மாதா கோவில் வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஒரு சில கடைகளை தவிர பெரும்பாலான கடைகளை வியாபாரிகள் திறந்தனர்.
பின்னர் வியாபாரிகள் படிப்படியாக கடைகளை திறந்தனர். ஒருசில வியாபாரிகள் மட்டும் தாமாக முன் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகளை மூடினர். பஸ், ஆட்டோ, வேன்கள் வழக்கம்போல் ஓடின. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கின. கடையடைப்பு போராட்டம் காரணமாக காரைக்காலில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.