மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் சாவு

பிரசித்தி பெற்ற புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நடைபயிற்சி சென்ற போது மயங்கி விழுந்து திடீரென இறந்தது. யானையின் உடலுக்கு ஏராளமான பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.;

Update:2022-11-30 22:48 IST

புதுச்சேரி

பிரசித்தி பெற்ற புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நடைபயிற்சி சென்ற போது மயங்கி விழுந்து திடீரென இறந்தது. யானையின் உடலுக்கு ஏராளமான பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

கோவில் யானை லட்சுமி

புதுவையில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் 31 வயதான யானை லட்சுமி தினந்தோறும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. காலை முதல் இரவு வரை கோவிலுக்கு வரும் பக்தர்களை மகிழ்வித்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த யானை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டது. இதனால் காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து யானையை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள், யானையை பராமரிப்பது குறித்தும் ஓய்வு கொடுப்பது குறித்தும் அறிவுரை வழங்கினார்கள்.

இதையடுத்து வேதபுரீஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் தங்க வைக்கப்பட்டிருந்த யானைக்கு பழங்கள் தவிர்த்து களி, பனை, தென்னை ஓலைகள் உணவாக வழங்கப்பட்டு வந்தது. ஊட்டச்சத்து மருந்தும் வழங்கப்பட்டது. உடல் உள்ளுறுப்புகளை பலப்படுத்த அஸ்த சூரணமும் கொடுக்கப்பட்டது.

மயங்கி விழுந்து சாவு

மருத்துவர்களின் ஆலோசனைப்படி மதியம் வரை ஓய்வில் இருக்கும் யானை அங்கிருந்து மாலை 4 மணிக்கு அழைத்துவரப்பட்டு மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இரவு வரை ஆசி வழங்கி வந்தது. யானை நிற்கும் இடத்தில் இயற்கையாக இருக்கும் வகையில் மணலும் பரப்பி வைக்கப்பட்டு இருந்தது.

வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் இரவில் தங்க வைக்கப்பட்டிருக்கும் யானையை பாகன்கள் தினமும் காலையில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது வாடிக்கை. அதன்படி இன்று காலை வழக்கம் போல் யானையை பாகன் சக்திவேல் நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றார்.

மிகவும் சோர்வாக காணப்பட்ட நிலையில் மிஷன் வீதியில் கலவைக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது லட்சுமி யானை திடீரென கீழே விழுந்தது. கால்களை உதறிய அந்த யானை சற்று நேரத்தில் உயிரிழந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த யானைப்பாகன் உடனே கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு கால்நடை மருத்துவர்கள் வந்து பரிசோதித்து பார்த்துவிட்டு யானை இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். மாரடைப்பு காரணமாக யானை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கதறி அழுத பக்தர்கள்

இதற்கிடையே யானை லட்சுமி இறந்து போன தகவல் சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சி மூலமாகவும் பரவியது. இதை கேட்டு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் சோகத்தில் மூழ்கினர். இந்தநிலையில் அங்கிருந்து யானையின் உடல் கிரேன் மூலம் ஒரு லாரியில் ஏற்றப்பட்டு மணக்குள விநாயகர் கோவில் முன் வைக்கப்பட்டது.

தொடர்ந்து கோவில் நடை சாத்தப்பட்டது. யானை இறந்த தகவல் அறிந்து மணக்குள விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று யானைக்கு அவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு யானையின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கோவில் அருகே பல்வேறு இடங்களில் யானையின் படம் வைக்கப்பட்டு அதற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கவர்னர் தமிழிசை அஞ்சலி

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் லட்சுமிநாராயணன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், வர்த்தக பிரமுகர்கள், இந்து முன்னணி அமைப்பினர், பா.ஜ.க.வினர் என பல்வேறு தரப்பினர் திரண்டு வந்து யானை லட்சுமிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், மணக்குள விநாயகர் கோவிலுக்கு நிறைவாக இருந்த லட்சுமி யானை இல்லாததை சிந்தித்து கூட பார்க்க முடியவில்லை. நம்முடன் அன்புடன் பழகி வந்த லட்சுமி யானை ஆசீர்வாதம் வழங்குவது மட்டுமல்ல ஆசையோடு விளையாடும். புதுவையை சேர்ந்த ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் ஏற்பட்ட இழப்பாகவே கருதுகிறார்கள். அவர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கத்தேரில் மணக்குள விநாயகர் வரும் போது முன்னால் யானை லட்சுமி கம்பீரமாக வருவதை இனி பார்க்க முடியாது என்கிற போது வருத்தமாக உள்ளது. 5 வயதில் இருந்து 25 ஆண்டுகளாக நம்மோடு இருந்த லட்சுமியின் உடல் முழு மரியாதையோடு இறுதிச்சடங்கு செய்ய அரசு துணை நிற்கும் என்றார்.

பக்தர்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்

மாலை 3 மணி அளவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்வலம் மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு நேரு வீதி, அண்ணா சாலை, மறைமலையடிகள் சாலை, புதுச்சேரி-கடலூர் சாலை வழியாக வனத்துறை அலுவலகம் பின்புறம் உள்ள காளத்தீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு வந்து சேர்ந்தது.

வழிநெடுகிலும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பூக்களை தூவியபடி கண்ணீருடன் யானை லட்சுமிக்கு பிரியாவிடை கொடுத்தனர். சிவவாத்தியம் முழங்க ஏராளமான சிவபக்தர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் லாரியில் இருந்தபடியே யானைக்கு மணக்குள விநாயகர் கோவில் அர்ச்சகர்கள் பல்வேறு பூஜைகள் செய்தனர். அதைத்தொடர்ந்து அங்கு ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் லட்சுமி யானையின் உடல் ராட்சத எந்திரம் மூலமாக தூக்கி குழியில் இறக்கி வைக்கப்பட்டது.

உப்பு, மஞ்சளால் மூடப்பட்டது

அதன்பின் யானையின் உடல் கூராய்வுக்கான ஏற்பாடுகள் நடந்தன. ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவன டாக்டர் நாயர், சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டாக்டர் ஜெயந்தி ஆகியோர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உடல் கூராய்வு நடத்தினார்கள். மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரை இது நடந்தது.

இதையடுத்து யானையின் உடல் மீது உப்பு, மஞ்சள் பொடி, பிளீச்சிங் பவுடர் ஆகியவை மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டன. அதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்துவிட்டு மண்வாரி இறைத்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலமாக குழியில் மணல் கொட்டப்பட்டு மூடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்