புதுவையில் மேலும் புதிய நூலகங்கள் திறக்கப்படும்

மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுவையில் மேலும் பல புதிய நூலகங்கள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.;

Update:2023-09-21 23:39 IST

புதுச்சேரி

மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுவையில் மேலும் பல புதிய நூலகங்கள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

விருதுகள் வழங்கும் விழா

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கவிஞர் தமிழ் ஒளியின் பிறந்த நாள் விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா இன்று கம்பன் கலையரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார். அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கலை பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார்.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு கவிஞர் தமிழ் ஒளியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தார். தொடர்ந்து தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது:-

நூலகங்கள் திறக்கப்படும்

புதுச்சேரி மாநிலம் விடுதலை போராட்ட காலத்தில் இருந்தே தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இங்கு தற்போது நிறைய நூல்கள் வெளி வருகின்றன. நல்ல நூல்களை படிக்கும் போது தான் நல்ல சிந்தனை உருவாகும். மக்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை பெற முடியும். எனவே ஓய்வு நேரங்களில் நல்ல நூல்களை படிக்க வேண்டும்.

புதுவையில் தமிழ் அறிஞர்கள் எழுதிய நூல்களை நூலகங்களுக்கு வாங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதிக நூல்களை படிக்கும் போது மாணவர்களுக்கு நல்ல சிந்தனை வரும். எனவே புதுச்சேரியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மேலும் பல புதிய நூலகங்கள் திறக்கப்படும். கருவடிக்குப்பம் பூங்காவிற்கு கவிஞர் தமிழ் ஒளியின் பெயர் சூட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

93 பேருக்கு விருதுகள்

விழாவில் கம்பன் புகழ் இலக்கிய விருது 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலும், நேரு குழந்தைகள் இலக்கிய விருது 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலும், தொல்காப்பியர் விருது 2010-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையும் மொத்தம் 93 தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்