சிவலிங்கம், இந்தியா வரைபடம் வடிவில் நெல் சாகுபடி

இயற்கை முறையில் சாகுபடி செய்ய வலியுறுத்தி சிவலிங்கம், இந்தியா வரைபடம் வடிவில் நெல் சாகுபடி பெரும் வரவேற்பை பெற்றதுடன் சமூக வலைதளத்திலும் வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2022-11-11 17:30 GMT

காரைக்கால்

காரைக்காலை அடுத்த கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி பாஸ்கர். இவர் விரிச்சிகுடி கிராமத்தில் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். இவரது வயலில் அழிந்து வரும் பல்வேறு வகையான நெற்பயிர்களை சாகுபடி செய்து வெற்றி கண்டுள்ளார்.

இந்நிலையில் அனைவரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வயலின் நடுவே அரிய வகை நெற்பயிரான ராஜமுடி, சின்னார் 20 மற்றும் செங்கல்பட்டு சிறுமனி சம்பா நெல் ரகங்களை கொண்டு சிவலிங்கம், இந்தியா வரைபட வடிவத்தில் நடவு செய்துள்ளார்.

பயிர்கள் நன்றாக வளர்ந்து செழிப்புடன் காணப்படுகிறது. பச்சை பசேலென காட்சியளிக்கும் வயல்களுக்கு நடுவே இந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதுகுறித்து அறிந்த காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள், கல்லூரி இணை பேராசிரியர் அனந்தகுமார் தலைமையில், அவரது வயலில் அண்மையில் சென்று ஆய்வு செய்தனர். இது விவசாயிகள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் சமூக வலைதளத்திலும் வீடியோ வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்