பிளஸ்-2 மாணவன் பலி

புதுவை அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதியதில் லிப்ட் கேட்டு சென்ற பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-19 17:42 GMT

புதுச்சேரி

புதுவை அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதியதில் லிப்ட் கேட்டு சென்ற பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பிளஸ்-2 மாணவர்

புதுவை பொறையூர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது மகன் ராகவன் (வயது 17). முத்திரையர் பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். ராகவனை தினமும் பள்ளிக்கு பால்ராஜ் அழைத்துச்சென்று விடுவது வழக்கம்.

இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் ராகவன் பள்ளிக்கு புறப்பட்டான். ஆனால் அவரது தந்தை பள்ளிக்கு அழைத்துச்செல்வதில் தாமதமானதாக தெரிகிறது. எனவே ராகவன் பள்ளிக்கு யாருடனாவது செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பினான்.

விபத்து

இந்தநிலையில் பொறையூரில் இருந்து புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற செல்வகார்த்திக் என்பவரிடம் 'லிப்ட்' கேட்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். தமிழக பகுதியான பங்களா மேடு பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராகவன் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர். செல்வகார்த்திக்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கண்ணாடி உடைப்பு

இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய லாரியை மடக்கிய பொதுமக்கள் கல்வீசி தாக்கினர். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு குருமாம்பேட் தொழில்முனைவோர் கூட்டமைப்பு சார்பில் ரூ.50 ஆயிரத்து 500 நிவாரண நிதி வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்