விமான நிலையம் விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு
விமான நிலையம் விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
புதுச்சேரி
விமான நிலையம் விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறிய ரக விமானம்
புதுவை லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. இப்போது இங்கு 72 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் வந்து செல்கின்றன.
இதன் ஓடுதளம் 1,502 மீட்டர் நீளமே உள்ளது. விமான ஓடுதளத்தை 3 ஆயிரத்து 300 மீட்டராக நீடித்தால்தான் பெரிய அளவிலான விமானங்கள் வந்து செல்ல முடியும்.
விரிவாக்க பணி
விமான நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று புதுவை அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசும் நிதி அளிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்காக தமிழக பகுதியிலிருந்து 240 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தருமாறு புதுவை அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
மீட்டுதர...
இதற்கிடையே லாஸ்பேட்டை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான வாசன் நகர், வெங்கடேஸ்வரா நகரில் இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு சொந்தமான நிலம் 4 ஏக்கர் உள்ளதாகவும், அது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அதை மீட்டு தருமாறும் புதுவை அரசுக்கு கடிதம் கொடுக்கப்பட்டது.
அந்த பகுதியில் வீட்டுமனைகள் பல இருக்க 13 பேர் வீடுகட்டி குடியிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இதுகுறித்து முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் ஆணையத்தின் இடத்தை கண்டறியும் விதமாக சர்வே செய்ய தாசில்தார் ராஜேஷ்கண்ணா மற்றும் அதிகாரிகள் அங்கு சென்றனர்.
அதிகாரிகளுடன் வாக்குவாதம்
அப்போது அங்கு குடியிருப்போர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தங்களது சொந்த நிலம். அரசு நிலம் அல்ல என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த 2000-ம் ஆண்டு கிரயம் செய்து தாங்கள் வீடுகட்டி குடியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
அதற்குரிய பத்திரங்களையும் அவர்கள் தாசில்தாரிடம் காட்டினார்கள். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தங்களது சர்வே பணிகளை கைவிட்டனர். இந்திய விமான நிலைய ஆணையத்தின் பதிவேடுகள், பொதுமக்கள் வழங்கிய பத்திரங்கள் ஆகியவற்றை வாங்கி சரிபார்த்து அதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.