சிறுமழைக்கு கூட தாக்குப்பிடிக்காத சாலைகள்
புதுவையில் சிறு மழைக்குகூட தாங்காமல் சாலைகள் பல்லாங்குழியாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.;
புதுச்சேரி
புதுவையில் சிறு மழைக்குகூட தாங்காமல் சாலைகள் பல்லாங்குழியாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
சிறு மழைக்கு...
வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின் ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்துள்ளது. அதிலிலும் கனமழை ஏதும் இதுவரை பெய்யவில்லை. ஆனால் புதுவை சாலைகள் கனமழையினால் பாதிக்கப்பட்டவை போல் காணப்படுகிறது.
கடந்த ஓராண்டுக்குள் போடப்பட்ட சாலைகள் கூட இந்த சிறு மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளன. பல இடங்களில் சாலை பல்லாங்குழியாக மாறியுள்ளது. குறிப்பாக புதிய பஸ் நிலைய பகுதி, கிழக்கு கடற்கரை சாலையின் நிலைமை மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது.
குண்டும் குழியுமாக மாறியது
தமிழக பகுதியில் உள்ள சாலைகள் நல்ல நிலையில் இருக்கும்போது புதுவை சாலைகள் எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன.
பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து சாலையில் பரவி கிடகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சறுக்கி விழுந்து வருகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.