ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தல்
ஒடிசாவில் இருந்து புதுவைக்கு ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்திய 4 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.;
புதுச்சேரி
ஒடிசாவில் இருந்து புதுவைக்கு ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்திய 4 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா புழக்கம்
புதுவையில் போதைப்பொருட்களான கஞ்சா, புகையிலை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீஸ் ஐ.ஜி. சந்திரன் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து நாள்தோறும் சோதனைகளை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
போதைப்பொருட்கள் பெரும்பாலும் வெளிமாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் ரெயில்களில் கடத்தி வரப்படுகின்றன. எனவே அடிக்கடி புதுச்சேரி ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் சோதனை
இந்தநிலையில் இன்று ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி வந்த ரெயில் பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தினார்கள். போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 4 வாலிபர்கள் புகையிலை பொருட்களை தங்கள் பைகளில் பதுக்கி கடத்தி வந்திருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.