சென்டாக் கலந்தாய்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடங்கியது

புதுவையில் நீட் நுழைவுத்தேர்வு அல்லாத இளநிலை, இளங்கலை படிப்புகளில் சேர சென்டாக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது இன்று முதல் தொடங்கியுள்ளது.

Update: 2023-05-17 18:05 GMT

புதுச்சேரி

நீட் நுழைவுத்தேர்வு அல்லாத இளநிலை, இளங்கலை படிப்புகளில் சேர சென்டாக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது நேற்று முதல் தொடங்கியுள்ளது.

சென்டாக் விண்ணப்பம்

புதுவையில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் அரசு இடஒதுக்கீட்டில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை சென்டாக் (ஒருங்கிணைந்த சேர்க்கைக் குழு) மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தற்போது பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் சென்டாக்கிற்கு விண்ணப்பிப்பது தொடங்கப்படாமல் இருந்தது.

எனவே சென்டாக் மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு சென்டாக்கில் விண்ணப்பிப்பது நேற்று தொடங்கியது.

இது தொடர்பாக கல்வித்துறை பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் அல்லாத படிப்புகள்

2023-24-ம் கல்வியாண்டிற்கான நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளான பி.டெக், பி.எஸ்சி. (விவசாயம், நர்சிங்), பிசியோதெரபி, பி.பார்ம், பி.ஏ. எல்.எல்.பி. (சட்டம்), மற்றும் பட்டய படிப்புகள், இளங்கலை அறிவியல் மற்றும் வணிக படிப்புகள் (பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ.) மற்றும் இளநிலை நுண்கலை படிப்பு களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பம் சமர்ப்பிப்பது தற்போது தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ந்தேதி மாலை 5 மணிவரை சமர்ப்பிக்கலாம். பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை, கலை அறிவியல் மற்றும் வணிகம் சார்ந்த படிப்புகளுக்கு மற்ற மாநில ஒதுக்கீட்டின் கீழ் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

10,848 இடங்கள்

தொழில்முறை படிப்புகளில் 5 ஆயிரத்து 229 இடங்களும், கலை அறிவியல் படிப்புகளில் 4 ஆயிரத்து 320 இடங்களும், நுண்கலை படிப்புகளில் 90 இடங்களும், என்ஜினீயரிங் கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு 292 இடங்களும் உள்ளன. நீட் தேர்வு அடிப்படையிலான பாடப்பிரிவுகளில் 917 இடங்களும் உள்ளன. அதாவது 10 ஆயிரத்து 848 இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.300, ஆதிதிராவிட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்கள் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். தொழில்முறை படிப்புகளுக்கு விண்ணப்பிப்போர் ரூ.1,000, ஆதிதிராவிட, பழங்குடியின, மாற்றுத்திறனாளிகள் ரூ.500 கட்டணமாக செலுத்தினால்போதும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கட்டணம் ரூ.5 ஆயிரமாகும்.

நர்சிங் படிப்புகள்

ஜூன், ஜூலை மாதங்களுக்குள் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிக்கப்பட்டு விடும். நர்சிங் படிப்புகளுக்கு இந்த ஆண்டு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். வருவாய்த்துறையில் சாதி சான்றிதழ் பெறுவதில் உள்ள கஷ்டங்களையும் அறிந்துள்ளோம். தற்போது பழைய சான்றிதழ் இருந்தால் அதன் எண்ணை குறிப்பிட்டால் போதுமானது.

புதுவையில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 146 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோப்புகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பான வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கு ஆட்சேபனைகள் கேட்கப்பட்டு இறுதி விதிமுறைகள் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். பள்ளிகள் திறக்கும் முன்பாக இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கையேடு வெளியீடு

முன்னதாக சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்பான கையேட்டை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார். அதனை கல்வித்துறை செயலாளர் ஜவகர், சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்