மீன் குட்டை அமைக்க மானியம்
மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தில் கீழ் மீன் குட்டை அமைக்க மானியம் வழங்கப்படும் என்று கூடுதல் வேளாண் இயக்குனர் கூறினார்.;
காரைக்கால்
புதுச்சேரி அரசு வேளாண்துறை மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மூலம் 6 வார காலத்திற்கு உள்நாட்டு மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் அகலங்கண்ணு கிராமத்தில் நடக்கிறது. காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் செந்தில்குமார் முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா தேசிய திட்டத்தின் மூலம் புதிதாக மீன் குட்டை அமைப்பதற்கு எக்டேருக்கு ரூ.7 லட்சம் வழங்கப்படுவதாகவும், இதில் பெண்கள் மற்றும் அட்டவணை பிரிவினர்களுக்கு 60 சதவீத மானியம், மற்றவர்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
துணை வேளாண் இயக்குனர் ஜெயந்தி (இடுப்பொருள்), மீன்வளத்துறை ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் உள்நாட்டு மீன் வகைகள், அவற்றின் வளர்ப்பு முறைகள் குறித்து விளக்கினர். இந்த பயிற்சி முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தென்னங்குடி வேளாண் அதிகாரி அலன், ஆத்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் புருசோத்தராஜ், கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.